ஜல்லிக்கட்டு, ரேக்ளாவில் கலக்கும் பாரம்பரிய மலைமாடுகள்!..

தமிழகத்தில் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மலைமாடுகளை பாதுகாக்க மாடுகள் வளர்ப்போர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என அனைவரும் துணை நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு, ரேக்ளாவில் கலக்கும் பாரம்பரிய மலைமாடுகள்!...
Published on

தேனி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான மலைமாடுகள், தமிழகத்தின் தொன்மைமிகு நாட்டு மாட்டு இனங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.

'தேனி மலை மாடுகள்'

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது 'மலை மாடுகள்' எனப்படும் பாரம்பரிய நாட்டு மாட்டு இனம். பல நூற்றாண்டுகளாக இம்மண்ணின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் இந்த மாடுகள், வெறும் கால்நடைகள் மட்டுமல்ல. அவை அந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத் தூண்கள். இவை தமிழகத்தின் தொன்மைமிகு நாட்டு மாட்டு இனங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

மலைமாடுகள்.

நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்

தேனி மலைமாடுகள் மற்ற சாதாரண மாடுகளைப் போன்றவை அல்ல. கடுமையான மலைப் பாதைகளிலும், செங்குத்தான பாறைகளிலும் மிக லாவகமாக ஏறிச் செல்லும் அசாத்திய உடலமைப்பு கொண்டவை. வறட்சி மற்றும் கடுமையான காலநிலையைத் தாங்கி வளரக்கூடியவை. காடுகளில் கிடைக்கும் மூலிகைகளையும், இயற்கையான புற்களையும் மட்டுமே உண்டு வாழ்வதால், இவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்.

சாணம் மிகச்சிறந்த இயற்கை உரம்

இந்த மாடுகளின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவை விவசாய நிலங்களுக்கு மிகச்சிறந்த இயற்கை உரமாகும். ஓடி ஆடி மேயும் சுறுசுறுப்பும், கூர்மையான கொம்புகளும் இவற்றின் முக்கிய குணாதிசயமாகும். பகலில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் மாடுகள், மாலையில் பட்டியில் அடைக்கப்படும். அவற்றின் சாணம், பட்டியில் இருந்து சேமிக்கப்பட்டு இயற்கை உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு என்று தனி கிராக்கி உள்ளது. இதனை விவசாயிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

காடு 6 மாதம், நாடு 6 மாதம்

காடு 6 மாதம், நாடு 6 மாதம் என்பார்களே, அது இந்த மலைமாடுகளுக்கு சரியாகப் பொருந்தும். இவை 6 மாத காலம் மலைப்பகுதிகளிலும், 6 மாத காலம் ஊர்ப்புற பகுதிகளிலும் வாழ்பவை. தலைமுறை தலைமுறையாக இந்த மலை மாடுகளை வளர்க்கும் கால்நடை வளர்ப்போர், தங்களின் மாடுகளைக் கூட்டமாக மலைக் காடுகளுக்குள் ஓட்டிச் செல்வது வழக்கம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதலே வனத்துறையினரிடம் முறையான கட்டணம் செலுத்தி 'மேய்ச்சல் அனுமதி' பெற்று, மாடுகளைக் காடுகளுக்குள் கொண்டு சென்று மேய்த்து வந்தனர். மழைக் காலங்களில் ஊர்ப்புற பகுதிகளிலும், கோடை காலங்களில் மலைப்பகுதிகளிலும் இவை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படும். மலைப்பகுதியில் பட்டி அமைத்து மாடுகளை மேய்த்து வந்த காலங்களும் உண்டு.

ஜல்லிக்கட்டு, ரேக்ளா

தேனி மலைமாடுகளில் இருந்து பெறப்படும் கன்றுகள், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களில் முத்திரை பதித்து வருகின்றன. இதன் வலிமை, வேகம், ஆக்ரோஷம் போன்றவை ஜல்லிக்கட்டு களத்தை அனல் பறக்க விடுகின்றன. வாடிவாசலில் இருந்து வெளியேறும் முன்பே களத்தையும், வீரர்களையும் இவை கூர்ந்து கவனிக்கும். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறும் இதன் அழகும், கம்பீரமும் தனித்துவம் வாய்ந்தவை.

இந்த கன்றுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தய பிரியர்கள் தேனிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களுக்கு பிடித்த கன்றுகளை நேரில் வந்து பார்த்து வாங்கிச் செல்கின்றனர். சிலர் கன்றுகளை வாங்கி சில ஆண்டுகள் வளர்த்து விற்பனை செய்வதும் உண்டு. தேனி மாவட்ட கால்நடை வர்த்தகத்தில் மலைமாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அழிவின் விளிம்பில்...

பாரம்பரிய மலைமாடுகள் தற்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இந்த மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில் வனத்துறைக்கும், மாடுகளை வளர்ப்போருக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்குவதில் வனத்துறை கெடுபிடி காட்டி வந்தது. வன விலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை முன்னிறுத்தி மலைமாடுகளுக்கான மேய்ச்சல் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

ஐகோர்ட்டின் மதுரை கிளை தீர்ப்பு

மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தடை, மலைமாடுகள் வளர்ப்போரின் தலையில் பேரிடியாக இறங்கியது. மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றால், வனத்துறையின் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர்.

மேய்ச்சல் நிலம் தேடி...

இதன் விளைவாக, மலைமாடுகளின் எண்ணிக்கை வேகமாக சரியத் தொடங்கியதாக மாடுகளை வளர்ப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் நிலம் தேடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாடுகள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தனியார் நிலங்களிலும், மலையடிவார பகுதிகளிலும் தற்போது மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தார்ச்சாலைகளில் அழைத்துச் செல்லும்போது வாகன விபத்துகளில் சிக்கி மாடுகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

காடும், ஊருமாய் வாழ்ந்த மலைமாடுகள், சில ஆண்டுகளாக மேய்ச்சலுக்காக நாடோடிகளாக ஊர், ஊராய் இடம் பெயரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த மாடுகளின் மேய்ச்சலுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்கும் இடங்களே சிறந்தவை. பட்டியில் இருந்து காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது நீர்நிலையில் தண்ணீர் குடிக்க அழைத்துச் செல்வார்கள். பின்னர் மாலையில் பட்டியில் அடைக்கும் போது மீண்டும் நீர்நிலைக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால், மலையடிவாரத்தை ஒட்டிய நீர்நிலைகள் சார்ந்து, சில மாதங்களுக்கு ஓரிடம் என்ற வகையில் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வாறு இடம் பெயரும்போது விபத்திலும், புதுப்புது சூழலில் நோய் தாக்கியும் மாடுகள் பலியாவது தொடர்கதையாக உள்ளது.

போடி முந்தல் பகுதியில் மேய்ச்சல் இடம் தேடி மலைமாடுகள் சாலையில் அணிவகுத்துச் சென்ற காட்சி.

மலைகளில் மேய்ச்சலுக்கு தடை

ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இருந்த இனம் தற்போது, சில ஆயிரங்களாக குறைந்து அழிவின் விளிம்பில் நிற்கின்றன. மலைகளில் மேய்ச்சலுக்கு தடை உள்ளதால் அந்த தடையை விலக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும், மாவட்டம் முழுவதும் மேய்ச்சல் தரிசு நிலங்களை மீட்டெடுத்து அவற்றை மேய்ச்சலுக்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்பதும் கால்நடை வளர்ப்போரின் கோரிக்கையாக உள்ளது. அரசு இந்த மாடுகளை பாதுகாக்க துணை நிற்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நிறங்கள் சூட்டும் பெயர்கள்

மலைமாடுகளில், அவற்றின் தோலின் நிறம் மற்றும் உடலில் அமைந்திருக்கும் புள்ளிகள், கோடுகளின் வடிவத்தை வைத்து அவை 'போர்' கன்றுகளாக வகை பிரிக்கப்படுகின்றன. கன்றாக இருக்கும்போது லேசான புள்ளிகளாகத் தொடங்கி, வளர வளர உடலின் 'போர்' நிறம் தெளிவுபெற்று அடர்த்தியாக மாறும். அதன் விவரம் வருமாறு:

பல வண்ணங்கள், பல வடிவங்களில் உள்ள தேனி மலைமாடுகள்.

செம்போர்: வெள்ளைப் பின்னணி உடலில் அடர்ந்த சிவப்பு அல்லது செவலை நிறத்துடன் ஆங்காங்கே புள்ளிகள் அல்லது வரிகள் கலந்து காணப்படும்.

கரும்போர்: வெள்ளைப் பின்னணி உடலில் ஆங்காங்கே கருப்பு நிற புள்ளிகள் அல்லது வரிகள் கலந்து காணப்படும்.

கருமறை: உடலில் புள்ளிகளாக இல்லாமல், வரைபடம் போலவோ, புள்ளி திட்டுகளாகவோ அமைந்திருக்கும் தோல் வண்ணம் ஆகும். வெள்ளைப் பின்னணி கருப்பு நிறத் திட்டுகள் அமைந்திருந்தால் அது கருமறை.

செம்மறை: வெள்ளை பின்னணியில் சிவப்பு அல்லது செவலை நிறத் திட்டுகள் அமைந்திருக்கும்.

மைனாப்போர்: உடலில் வெள்ளை புள்ளிகளுடன் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

வெண்போர்: உடலில் பெரும்பகுதி வெண்மையாகவும் அதில் லேசான சாம்பல் அல்லது சிவப்பு அல்லது கருப்பு புள்ளிகள் பரவி காணப்படும்.

செவலை: உடல் முழுவதும் புள்ளிகள் இல்லாமல் அடர் சிவப்பு அல்லது செம்பட்டை நிறத்தில் இருப்பவை.

பால்வெள்ளை: உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும். அதே பால் வெள்ளையில், உடலின் முன் பகுதியில் சந்தனம் பூசியது போல் லேசான மஞ்சள் நிறம் இருந்தால் அது சந்தனப்பிள்ளை என்று அழைக்கப்படுகிறது.

காரி: உடல் முழுவதும் ஒரே சீராக அடர் கருப்பு நிறத்தில் இருந்தால் அது காரி. அதுவே, முன்னாடியும், பின்னாடியும் கருப்பாகவும், நடுவில் லேசான செவலை நிறத்திலும் இருந்தால் அது பனங்காரி.

சாம்பல்: புகை போன்ற மங்கலான சாம்பல் நிறத்தில் இருக்கும். இது மயிலை வகையின் உட்பிரிவு ஆகும். இந்த நிறங்கள் தவிர்த்து முகம் மற்றும் உடல் குறியீடுகளை வைத்தும் வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில், நெற்றியில் மட்டும் தனியாக ஒரு வட்டமான வெள்ளைப் பொட்டு போன்ற அடையாளம் இருந்தால் அது பொட்டு என்றும், முகம் மற்றும் கொம்புப் பகுதியில் தனித்துவமான வரிகள் இருந்தால் அது கொம்பன் என்றும் அழைக்கப்படுகிறது.

தனித்துவமிக்க செம்போர், கரும்போர்

தேனி மலைமாடுகளில் பல வண்ணங்கள் உள்ள போதிலும், செம்போர், கரும்போர் கன்றுகளுக்கே மவுசு அதிகம். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், ரேக்ளா பந்தய காளை வளர்ப்போர் இந்த கன்றுகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தய களங்களில் தனித்துவம் பெற்றது செம்போர் கன்றுகள். இதன் கம்பீர தோற்றம் களத்தில் மிக எடுப்பாக தெரியும். ஜல்லிக்கட்டு வாடிவாசலிலும், ரேக்ளா பந்தயங்களிலும் இந்த காளைகள் சீறிப்பாயும் வீரியம் கொண்டவையாக கருதப்படுகின்றன. அதுபோல், கரும்போர் என்பது அதிக சேட்டைக்கார காளை என பெயர் எடுத்தது. கருப்பும், சாம்பலும் கலந்த மிரட்டலான தோற்றம் கொண்டதோடு, அதிக சுறுசுறுப்பும் முரட்டுத்தனமும் கொண்டவை. இதனால், செம்போரை விடவும் கரும்போருக்கு கிராக்கியும் அதிகம், விலையும் அதிகம்.

கன்றுகளின் விலை

ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களுக்கு தேனி மலைமாடுகளில் இருந்து கன்றுகள் தேர்வு செய்யப்படுகின்றன. கன்றுகளின் வயது, போர் வகைக்கு ஏற்ப அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. சுமார் ஒரு வயதுள்ள கரும்போர் கன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், செம்போர் கன்று ரூ.14 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. 1 முதல் 3 வயது வரையிலான கன்றுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செல்கிறது. 5 வயது பூர்த்தி அடைந்த காளைக்கு அதன் கொம்பு, முகம் மற்றும் உடல் அமைப்பு, ஆக்ரோஷம், வேகத்தை பொறுத்து அவை விலைபோகிறது. அதிலும் கரும்போர், செம்போருக்கு தான் கிராக்கி. தனித்துவமான சில காளைகளை, சில லட்சம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்குவதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போட்டி போடும் நிலைமையும் உள்ளது.

கரும்போர், செம்போர் கன்றுகள்.

இயற்கை தந்த பலம்!

தேனி மலைமாடுகள் தினமும் மேய்ச்சலுக்காக 6 முதல் 12 கி.மீ. வரை நடந்து செல்கின்றன. மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்வதாலும், இயற்கையான புற்கள், மூலிகைகளை தின்பதாலும் அவற்றுக்கு உடல், மன வலிமை அதிகம். மேய்ச்சலுக்கு சென்ற இடத்திலேயே மாடுகள் கன்றுகளை ஈன்றிவிடும். பிறந்த ஒரு மணி நேரத்தில் கன்றுகள் எழுந்து, நடந்து மாடுகளுடன் சேர்ந்து பட்டிக்கு வந்து விடும். பிறந்த முதல் நாளிலேயே 5 கி.மீ. தூரத்துக்கு நடந்து வரும் இயற்கையான வலிமை இதற்கு உண்டு. சில மாடுகள், கன்றுகள் ஈன்றினால் கன்றுகளை மலைப்பகுதியில் அல்லது புதருக்குள் மறைத்து வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு. சில நாட்கள் வரை அவ்வாறு கன்றுகளை மறைத்து வைத்துக் கொண்டு, தானும் மறைந்து கொண்டு கன்றுகளை பாதுகாக்கும் குணம் கொண்டது. அவை, காடுகளில் உள்ள வேட்டை விலங்குகளில் இருந்து கன்றுகளை பாதுகாக்கும் இயற்கையான தற்காப்பு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

மாடுகள் கழுத்தில் மணி

மனிதர்களிடம் அவ்வளவு எளிதில் இணக்கமாக பழகாது. அதை கன்றுகளில் இருந்து பிடித்து வந்து அதனோடு பழகுவதற்கே மாதக் கணக்கில் காலம் எடுக்கும். பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகளில் இருந்து விற்பனைக்காக ஒருபோதும் பால் கறக்கப்படாது. பசுக்களின் பால் முழுவதும் கன்றுகளுக்கு தான். மற்ற மாடுகளை போல் பால் அதிகம் இருக்காது. அதே நேரத்தில் அதிக சத்து நிறைந்தது. இதனால். கன்றுகள் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், பலமிக்கதாகவும் இருக்கும். கிராமங்களில், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமானதாக இல்லாத பட்சத்தில், இங்கிருந்து பால் மாடுகளை வாங்கிச் சென்று தாய்ப்பாலுக்கு நிகராக பயன்படுத்துவதும் உண்டு. மேய்ச்சலுக்கு செல்லும் இடங்களில் மாடுகள் தொலைந்து விடாமல் தடுக்கவும், அவை இருக்கும் இடத்தை அடையாளம் காணவும் அவற்றின் கழுத்தில் மணியை கட்டித் தொங்கவிடுவதும் வழக்கம்.

கன்றுகளுக்கு பாலூட்டும் மலைமாடுகள்.

மீண்டும் வேண்டும் மேய்ச்சல் உரிமை

ஜான் பென்னிகுயிக் மலைமாடுகள் வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி கூறுகையில், 'தேனி மலைமாடுகளை பல தலைமுறையாக வளர்த்து வருகிறோம். ஜமீன் காலத்திலேயே மாடுகளை மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல அனுமதி பெறப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேய்ச்சல் அனுமதிக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, மேய்ச்சல் அனுமதியை இலவசமாக்கினார். காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என்பது போல், 6 மாத காலம் மலைப்பகுதியிலும், மீதம் 6 மாத காலம் விவசாய நிலம், தரைப்பகுதியிலும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்தோம். பின்னர் வனத்துறை கெடுபிடி காரணமாக மேய்ச்சல் அனுமதி சீட்டு வழங்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு, மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலயப் பகுதிகளில் மேய்ச்சலுக்குத் தடை விதித்தது. கால்நடைத் துறையின் மேய்ச்சல் தரிசு நிலங்களும் மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் நிலையில் இல்லை. இந்த தடை உத்தரவில் இருந்து விதிவிலக்கு பெற்றுத் தர அரசு முன்வர வேண்டும்.

கன்றுகள் விற்பனை

வன உரிமைகள் சட்டம் 2006-ன்படி, வனப் பகுதியை நம்பி வாழும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியச் சமூகத்தினருக்கு வனங்களில் மேய்ச்சல் உரிமை உண்டு. வனத்துறை இந்தச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி. மலைமாடு வளர்ப்போரின் பாரம்பரிய மேய்ச்சல் உரிமையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். போதிய மேய்ச்சல் நிலமின்றி மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு காளைகள் வளர்ப்பில் தமிழகம் முழுவதும் ஆர்வம் அதிகரித்துள்ளதால், கன்றுகள் வாங்க பலர் வருகின்றனர். கன்றுகள் விற்பனை தான் ஓரளவு வாழ்வாதாரமாக உள்ளது' என்றார்.

கென்னடி, கண்ணன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், 'காடுகளுக்குள் சென்று வரும் இந்த மாடுகள், அங்குள்ள அடர்ந்த புற்களை உண்பதால் காடுகளில் காட்டுத்தீ பரவுவது இயற்கையாகவே தடுக்கப்பட்டது. மேலும், மாடுகளின் கொம்புகள் பட்டு மண்ணின் தரம் உயர்ந்து, காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாக்கப்பட்டது. வன உரிமைச் சட்டம் 2006, மேய்ச்சல் உரிமையை அங்கீகரிக்கிறது. அந்த சட்டத்தின்படி மேய்ச்சல் அனுமதி பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். மேய்ச்சல் உரிமையை மீட்க பல போராட்டங்கள் நடத்தியும் தீர்வு இல்லை.

வனப்பகுதிக்குள் செல்ல தடை இருப்பதால், மாடுகள் பட்டினியால் இறப்பதை தடுக்க மலையடிவாரங்கள், அரசு தரிசு நிலங்கள், மேய்ச்சல் தரிசு நிலங்கள் ஆகியவற்றை உடனடியாக மீட்டு மலைமாடுகளின் மேய்ச்சலுக்கு ஒதுக்கித்தர வேண்டும். தேனி மலைமாடுகளை அழியும் நிலையில் உள்ள பாரம்பரிய நாட்டுமாடு என்று அறிவித்து அவற்றை வளர்ப்போருக்கு மாதாந்திர பராமரிப்பு மானியம், தீவன உதவி வழங்க வேண்டும். இந்த பாரம்பரிய இனம் அழிந்தால், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்த மலைமாடுகளில் இருந்து வலிமையான காளைகள் கிடைக்காமல் போய்விடும்' என்றார்.

வன அதிகாரிகள்

வன அதிகாரிகள் கூறுகையில், 'மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவதற்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், வன விலங்குகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே வனத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமானது' என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com