முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது வெளிவந்த 2 படங்களும் வெற்றி: விஜய்யின் ஜனநாயகனும் வாகை சூடுமா?

ஜனநாயகன் திரைப்படத்தின் தொடக்கத்தில், முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் என்று டைட்டில் கார்டு போடப்படுகிறது.
vijay, MGR, எம்.ஜி.ஆர்., விஜய்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான பிறகு வெளிவந்த மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றதுபோல், முதல்-அமைச்சர் விஜய்யின் ஜனநாயகனும் வாகை சூடுமா? என்று திரையுலகில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன்

தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. த.வெ.க. எனும் அரசியல் கட்சியை அவர் தொடங்கிய பிறகு, தனது கடைசிப்படம் 'ஜனநாயகன்' தான் என்று அப்போதே அறிவித்துவிட்டார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விருந்தாக ஜனவரி 9-ந் தேதி 'ஜனநாயகன்' படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் போனதால், திரைப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.

டைட்டில் கார்டில் முதல்-அமைச்சர்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு, தற்போது 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால், திரைப்படத்தின் தொடக்கத்தில், முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் என்று டைட்டில் கார்டு போடப்படுகிறது.

இதேபோல், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோதும் 1977 மற்றும் 1978-ம் ஆண்டுகளில் அவருடைய 2 படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. 'மீனவ நண்பன்', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற 2 படங்கள்தான் அவை.

கவர்னரிடம் 10 நாள் சிறப்பு அனுமதி

1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி 'மீனவ நண்பன்' வெளியானபோது, இப்போது விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்று 2 மாதங்கள் ஆனதுபோல், எம்.ஜி.ஆருக்கும் பதவியேற்று 2 மாதங்களே ஆகியிருந்தது.

அதேபோல், எம்.ஜி.ஆர். பதவியேற்று 6 மாதங்களுக்கு பிறகு, அதாவது 1978-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக, 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' திரைப்படம் வெளியானது. தனது கடைசிப் படமான இந்த படத்தில் சில பணிகளை முடித்து கொடுக்க வேண்டி இருந்ததால், கவர்னரிடம் 10 நாள் சிறப்பு அனுமதி பெற்று, எம்.ஜி.ஆர். முடித்துக் கொடுத்தார்.

வெற்றிப் படமாகுமா?

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான இந்த 2 படங்களும், அவர் முதல்-அமைச்சராவதற்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டாலும், நெருக்கடி நிலை, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து வந்ததால், திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

என்றாலும், 'மீனவ நண்பன்', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' ஆகிய 2 படங்களும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தன. 100 நாட்களை கடந்து ஓடின. தற்போதைய சூழ்நிலையில், திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்பது சாத்தியம் இல்லை என்றாலும், அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், வசூல் ரீதியில் முதல்-அமைச்சர் விஜய்க்கும் 'ஜனநாயகன்' வெற்றிப்படமாகவே அமையும் என்று கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com