

கடைசியில், மனிதர்களையும் இப்பிரச்சினையின் தாக்கம் எட்டுகிறது.
இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அடுத்த பத்தாண்டுகளில் மும்மடங்காகும் என்று கூறப்படுகிறது.
கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உண்பதற்குக் காரணம், அவை அந்த உயிர் களின் உணவைப் போலவே காட்சியளிப்பது மட்டுமல்லாது, அவற்றின் உணவைப் போன்ற மணத்தையும் கொண்டுள்ளன.
நீரிலிருந்து எடுத்த ஒரு பிளாஸ்டிக் துண்டை முகர்ந்து பாருங்கள். அதில் மீன் போன்றே வாசனை வரும் என்கிறார், நெதர்லாந்து கடல்வாழ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த சூழலியல் ஆய்வாளர் எரிக் ஜெட்லர்.
அப்படி மணம் வரக் காரணம், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது நுண்ணுயிர்கள் சூழ்ந்து, அவற்றின் மீது பிளஸ்டிஸ்பியர் எனும் ஓர் அடுக்காகப் படர்வதுதான் என் கிறார் எரிக்.
இந்த நுண்ணுயிர்கள் வெளியிடும் வேதிப்பொருட்கள் கடல்வாழ் உயிர்களின் உணவைப் போன்ற சுவை மற்றும் மணத்தைத் தருகின்றன. பிளாஸ்டிக்கில் இருந்து வெளியாகும் டை மெத்தைல் சல்பைடு எனும் வேதிப்பொருள் கடல்வாழ் உயிர்கள் மற்றும் மீன்களைக் கவரக் கூடியவை என்கிறார் ஜெட்லர்.
தங்கள் உணவை அதன் மணத்தைக் கொண்டு கண்டறியும் கடல்வாழ் பறவைகளுக்கு வேண்டுமானால் இந்தக் கூற்று பொருந்திப் போகலாம். ஆனால், திமிங்கலங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வது ஏன்? அவை நீரை உட்கொள்ளும்போது தவறுதலாக பிளாஸ்டிக் பொருட்களையும் விழுங்கி விடுகின்றன.
கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, ஆண்டு ஒன்றுக்கு கடலில் மட்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கின்றன. அதாவது 800 கோடி கிலோ பிளாஸ்டிக்.
கடலுக்குள் தேங்கி யிருக்கும் நீர் மட்டுமல்லாது, நீரோட்டமும் இருக்கும். அவை பெருங்கடல் நீரோட்டம் எனப்படுகின்றன.
அந்த நீரோட்டங்களுக்குள் சென்று சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாகச் சிதைந்துவிடும். அந்தத் துகள்கள் கடைசியில் கடல்வாழ் உயிர்களால் உட்கொள்ளப்படுகின்றன. கடலின் மேற்பரப்பில் மட்டுமல்லாது, அடியாழம் வரை பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன.
உண்மையில் நாம் மதிப்பிடுவதை விட கடலில் சேரும் பிளாஸ்டிக்கின் அளவு பன்மடங்கு இருக்கும் என ராஸ்கில்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் சைபர்க் கூறுகிறார்.
80 லட்சம் டன் என்ற மதிப்பீடு குறைவாக இருக்கக்கூடும் என்பதற்கு இரு காரணங்கள். முதலாவது, கடலில் மேற்பரப்பில் இருக்கும் பிளாஸ்டிக் கணக்கீட்டில், 0.3 மில்லிமீட்டர் அளவைவிடச் சிறியதாக இருக்கும் கழிவுகளைச் சேர்ப்பதில்லை. இரண்டாவது, மேற்பரப்பில் இருக்கும் கழிவுகளை மட்டுமே வைத்து முழு அளவையும் சொல்ல முடியாது. காரணம், மேலே மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருக்கும் ஒட்டுமொத்த பிளாஸ்டிக்கில் ஒரு மிகச்சிறிய பங்கு மட்டுமே என்று விளக்குகிறார் அவர்.
கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், 2025-ல் அதன் அளவு 1.75 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று 2015-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை எச்சரிக்கிறது.
பிளாஸ்டிக்குகள் தொடர்ந்து கடல்வாழ் உயிர்களால் உட்கொள்ளப்படும் சமயத்தில், அவற்றுக்கான பாதுகாப்பான மாற்றை பெரும் அளவில் ஏன் அறிவியல் தொழில்நுட்ப உலகம் உற்பத்தி செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
கடல் சூழலியல் குறித்துப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஆய்வாளர் மார்க் பிரவுன், பிளாஸ்டிக் பொருட்களை கடல்வாழ் உயிர்கள் உண்ணக் காரணமான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்ந்து, பிளாஸ்டிக் உற்பத்தியின்போது அவற்றைத் தவிர்க்க பொறியாளர்களும் சூழலியலாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார்.
பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிர் களுக்கு உண்டாக்கியுள்ள பாதிப்பின் அளவு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
திமிங்கலங்கள், பறவைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஓரளவு தெரியும். தொண்டையில் பிளாஸ்டிக் சிக்கி, அவற்றின் உணவுப் பாதையைக் கிழித்ததாலோ அல்லது அடைத்ததாலோ அவை உயிரிழக்கின்றன என்கிறார் சைபர்க்.
கடல் பறவைகள், ஆமைகள் எனப் பல்வேறு கடல் உயிரினங்களும் பிளாஸ்டிக்கை உண்பதால் மரணம் அடைகின்றன.
இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை மனிதர்கள் இன்னும் உணரவில்லை. உணரும்போதுதானே உரிய தீர்வு பிறக்கும்?