ஜம்மு-காஷ்மீரில் முழு அமைதி நிலவுகிறது, வதந்திகளை நம்ப வேண்டாம் : காவல்துறை

ஜம்மு-காஷ்மீரில் முழு அமைதி நிலவுகிறது, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Published on

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்தையும், அந்த மாநில மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதளசேவை, செல்போன் சேவைகள் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது, அங்கு சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த சூழலில், நேற்று டெல்லியில், நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் நிலவரம் மிகவும் மோசமடைந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங்கை தொடர்பு கொண்ட கேட்ட போது, இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தில்பாக் சிங் அளித்த பேட்டியில், சிறிய கல்வீச்சு சம்பவத்தை தவிர்த்து அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. அந்த கல்வீச்சு சம்பவமும் ஆரம்பத்திலேயே முடிவு கட்டப்பட்டு விட்டதுஎன்றார்.

இதேபோல், ஸ்ரீநகர் காவல்துறை டுவிட்டரில் வெளியிடப்பட்ட பதிவுகளில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இன்றும் அமைதி நீடித்தது. எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. சில இடங்களில் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டனஎன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள உள்நோக்கம் கொண்ட, புனையப்பட்ட செய்தியை நம்ப வேண்டாம் என்று மக்களை காவல்துறை தலைவரும், தலைமை செயலர் பிவிஆர் சுப்பிரமணியமும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com