தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம், ஜெகத்ரட்சகன் எம்.பி. கோரிக்கை

தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியிடம் ஜெகத்ரட்சகன் எம்.பி. நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published on

புதுடெல்லி,

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலை, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. ஜெகத்ரட்சகன் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ் மொழி இந்தியாவிலேயே மிகவும் தொன்மையானது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அங்கீகாரத்தை மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வழங்கியது. மேலும் தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் தங்களுடைய தாய்மொழியினை கற்றறிந்து கொள்ள மத்திய அரசின் உதவியை எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள். இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சில பரிந்துரைகளை தெரிவிக்கிறேன்.

* தமிழ் மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும்.

* மத்திய அரசின் அனைத்து அரசிதழ் அறிவிப்புகளும் தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்.

* செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கீழ் யூனியன் பிரதேசங்கள் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழ் கற்றல் மையங்கள் நிறுவ வேண்டும்.

* நவீன தரத்தில் தமிழ் இணையதள கற்றல் வள மையம் அமைப்பதற்காக, தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். மேலும் இலக்கியம் சார்ந்த தமிழ் வரலாறு மற்றும் கலாசார புத்தகங்கள், தமிழ் புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

* உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ். உலகத்தில் உள்ள 79 நாடுகளில் 1 கோடி தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தாய்மொழியை கற்றறிவதற்கு உதவ வேண்டும். எனவே அந்த நாடுகளில் இந்திய தூதரகங்கள் மூலமாக தமிழ் கற்றறியும் மையங்களை நிறுவ வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக அந்த மையங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

* தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்.

* தமிழ் மொழி, தமிழ் வரலாறு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட இலக்கியம் சார்ந்த சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு, இளங்கலை பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, முனைவர் படிப்பு மற்றும் அதற்கு பிந்தைய படிப்புகளை படிக்கும் மாணவர்கள், புலம்பெயர்ந்த தமிழர்களை ஊக்குவிக்கும் வகையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலமாக அய்யன் திருவள்ளுவர் பெயரில் சர்வதேச கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com