கோபிசெட்டிப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி

மின்கம்பியை மிதித்த அடுத்த கணமே பலத்த மின்சாரம் பாய்ந்தால் சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.
மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி.
மனோஜ்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை மின்சாரம் தாக்கியது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்த சிறுவன் மனோஜ் (வயது 16). அந்த சிறுவன் இன்று (புதன்கிழமை) அப்பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது, அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் சிறுவன் மனோஜ் எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளான். மின்கம்பியை மிதித்த அடுத்த கணமே பலத்த மின்சாரம் பாய்ந்ததால் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். உடல் கருகிய நிலையில் மயங்கிக் கிடந்த அவனை, தோட்டத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிறுவன் உயிரிழப்பு- போலீசார் விசாரணை

சிறுவனை பரிசோதித்த அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயத் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது குறித்து மின்வாரியத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா அல்லது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து விழுந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தோட்ட வேலைக்கு சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com