2 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு

ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்டது.
2 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் மற்றும் சினிமா தயாரிப்பாளர் பாஸ்கர் வீடுகளில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று இரவு நிறைவடைந்தது.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அறிக்கைகள் வெளியாகும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com