கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

பக்தர்கள் குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல்லில் வெள்ளைமாலை வீருமாறம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
இதற்கிடையே பக்தர்கள் குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, குளியலறை ஜன்னல் வழியாக வாலிபர்கள் சிலர், தங்களது செல்போன்களில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.இதனைக்கண்ட பெண்கள் கூச்சல் போட்டனர். அந்த சத்தம் கேட்டு பக்தர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது, வீடியோ எடுத்த 4 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை, பக்தர்கள் விரட்டி பிடித்தனர்.
பின்னர் அவர்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இதனையடுத்து செம்பட்டி நால்ரோடு பகுதிக்கு பக்தர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீசாரை கண்டித்தும், பெண்களை வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பக்தர்கள் சிலர் சாலையில் படுத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அதிகாலை 3 மணி அளவில் மறியல் தொடங்கியது. நேற்று காலை 8 வரை பக்தர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் செம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த வண்ணப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அதே ஊரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவனும் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






