

சென்னை,
போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மாமல்லபுரத்தில் இருந்து மெரினா வரை 60 கி.மீ தூரம் கடலில் நீச்சல் அடித்து 23 வீரர்கள் சாதனை படைத்தனர்.
போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக செங்கல்பட்டு மாவட்ட கடலோர பாதுகாப்பு படை மற்றும் சென்னை தனியார் நீச்சல் வீரர்கள் அமைப்பு சார்பில் மாமல்லபுரம் கடலில் இருந்து சென்னை மெரினா கடல் வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைவெளி இல்லாமல் நீந்தும் சாதனை போட்டி நடத்தப்பட்டது. இதில் நீச்சல் வீரர்கள் 23 பேர் கடலோர காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் முன்னிலையில் மாமல்லபுரம் கடலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்களின் தொடர் நீச்சல் பயணத்தை தொடங்கினர்.
தொடர்ந்து தேவனேரி. பட்டிபுலம், புதுஎடையூர்குப்பம். நெம்மேலிகுப்பம். புதுகல்பாக்கம், கோவளம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட ஆழ்கடல் வழியாக நீந்தி சென்று மெரினா கடலில் மாலை 4.30 மணிக்கு தங்கள் தொடர் நீச்சல் பயணத்தை நிறைவு செய்தனர். அவர்களுடன் கடலில் 5 படகில் நீச்சல் வீரர்களுக்கு அருகில் மருத்துவ குழுவினர், நீச்சல் பயிற்சியாளர்கள், உறவினர்கள் சென்றனர். மெரினா கடலில் கரை ஏறிய 23 நீச்சல் வீரர்களை உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார்.