

சென்னை,
மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை நாளை 'ஆசீர்வாத தீபம்' ஏற்றி பிரார்த்திப்போம் என்று மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றுவதே பாரத பிரதமர் மோடியின் வாழ்க்கையின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது. பொது சேவை மற்றும் தேச கட்டமைப்பிற்காக அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றி வரும் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால அரசு தலைமை பணி ஈடு இணையற்றது.
நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு, அது தேசத்திற்கே முன்மாதிரி மாநிலமாக உருவெடுத்தது. அதுபோலவே, அவர் பாரத பிரதமராக பதவியேற்ற பிறகு நமது நாடு உலகிற்கே குருவாக மாறி வருகிறது.
உலகளவில் 37 நாடுகளின் உயரிய விருதை பிரதமர் பெற்றுள்ளார். கொரானா காலத்தில் உலகமே பெரும் இன்னல்களை சந்தித்து திகைத்து நின்றபோது, பிரதமரின் சீரிய தலைமை, கொரனாவைில் இருந்து மக்களை காக்க எடுத்த நடவடிக்கைகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். கொரானா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டம், முத்ரா கடன் திட்டம், ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் உள்ளிட்ட பிரதமரின் தொலைநோக்கு மக்கள் நல திட்டங்கள் நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தி பீடுநடை போட செய்துள்ளது.
அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை நாட்டிற்கு ஒரு புதிய திசையையும் புதுப்பிக்கப்பட்ட வலிமையையும் அளித்துள்ளது. பிரதமரின் உறுதிப்பாடு மற்றும் செயல்திறன் காரணமாக வளர்ச்சியடைந்த இந்தியா- 2047 என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.
நாட்டின் இந்த முன்னேற்ற பயணத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமைக்கு நமது நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 17 அன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நம் வீடுகளில் 'ஆசீர்வாத தீபம்' ஏற்றுவோம். அவருக்கு நமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்போம். அவரது நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் இணைந்து ஆசிர்வாத தீபத்தை ஏற்றி, நமது பிரதமரின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.