

சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு சென்னை தியாகராயநகர் பாண்டிபஜாரில் கோல்டு ஹவுஸ் என்ற நகைக் கடை திறக்கப்பட்டது. அந்த கடையின் திறப்பு விழாவின்போது, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதுபற்றி பேசுவதற்காக சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையை சேர்ந்த சபீயா (வயது 43) என்ற பெண் மேற்கண்ட நகைக்கடைக்கு சென்றார். அந்த கடையின் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த பிஜோ ஜோஸ்(45) என்பவரை அணுகினார். அப்போது தான் சொந்தமாக வீடு வாங்க போவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதால் 250 சவரன் நகைகளை அடகு வைக்கவேண்டும் என்றும், அதற்கு உதவி செய்யுமாறும் சபீயா, நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டார்.
அவரும் உதவி செய்வதாக கூறினார். சபீயாவும் 250 சவரன் நகைகளை கொடுத்து அடகு வைத்து தருமாறு கூறினார். நகைகளை பெற்றுக்கொண்ட பிஜோ ஜோஸ், கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். 250 சவரன் நகைகளை இழந்த சபீயா, இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிஜோ ஜோஸை தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த பிஜோ ஜோஸ் நேற்று முன்தினம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை அழைத்து வரப்பட்ட, கைதான நகைக்கடை அதிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.