தொழில்நுட்ப கல்லூரியில் இந்த கல்வியாண்டு முதல் 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் - உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விஸ்வநாதன்
Published on

சென்னை,

இன்று (ஜுன் 1) சென்னை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தலைமையில் 2026-2027 ஆம் கல்வியாண்டு அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது :

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் தலைமையிலான இந்த அரசு தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு தரமான கல்வியை தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு மகத்தான கல்வி ஆண்டாக அமையும். மிகவும் வெளிப்படை தன்மையாக உயர்கல்வித் துறை முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி செயல்படும். பேராசிரிய பெருமக்களும், ஆசிரியரல்லா பணியாளர்களும் தங்களுடைய சிறப்பான பணியினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பின்னர், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பத்திரிக்கையாளரிடம் பேசியதாவது :

பகுதிநேர பட்டயப்படிப்பு

தமிழகத்திலுள்ள 55 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான, முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் https://www.tnpoly.in என்ற இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாமாண்டு, மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக 04.05.2026 முதல் 30.06.2026 வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு 31.05.2026 வரை 16,072 மாணவர்களும், 2,816 மாணவிகளும் ஆக மொத்தம் 18,888 மாணாக்கர்கள் முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரி மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெறும்.

3 புதிய பாடப்பிரிவுகள்

தமிழகத்திலுள்ள 44 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் டாடா நிறுவனத்துடன் இணைந்து Industry 4.0 திறன் மிகு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இந்த மையங்கள் மூலம் மாணாக்கர்களை பயிற்றுவிக்க பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் DIGITAL MANUFACTURING TECHNOLOGIES, AUTOMATION AND ROBOTICS மற்றும் INTERNET OF THINGS (IOT) ஆகிய 3 புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதனால் மாணவர்கள் பயன்பெற ஏதுவாக மொத்தம் 3,570 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு விளக்கம் பெற அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 110 தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை (TNEA – TFC Centres) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாணாக்கர்கள் தொடர்பு கொள்ளலாம்.

துணை கலந்தாய்வு

B.Arch படிப்பிற்கான NATA நுழைவுத் தேர்வு ஜுன் இரண்டாம் வாரம் வரை நடைபெற இருப்பதால் B.Arch படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றங்களை 20.06.2026 வரை மேற்கொள்ளலாம். HSC துணைத் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன், தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை (TNEA) துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு அவர்களின் விளையாட்டு சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆனையம் மூலம் முதற்கட்டமாக இன்று(ஜுன்1) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி 15.06.2026 வரை நடைபெறும். அவர்களுக்கான கால அட்டவணை விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மூலமாக ஒவ்வொருவருக்கும் தனியாக அனுப்பபட்டுள்ளது. மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.

கலை மற்றும் அறிவியல்

மேலும், 2026-2027 ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் 159 இளநிலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகளில் 1,26,959 ( Shift – I – 1,01,022/ Shift – II – 25,937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2026 முதல் 29.06.2026 வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, 29.05.2026 வரை 2,24,034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டு முதல் வயது வரம்பு 40 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 2026-2027ஆம் கல்வியாண்டில் 21 வயதிற்கு மேற்பட்ட 1,000 மாணவிகள், 609 மாணவர்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பித்துள்ளனர்.

சிறப்பு ஒதுக்கீடு

இந்நிலையில், சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள்/ விளையாட்டு வீரர்கள்/ அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணாக்கர்கள்/ முன்னாள் ராணுவத்தினர்/ தேசிய மாணவர்படை/ பாதுகாப்பு படைவீரர்கள்) 05.06.2026 முதல் 06.06.2026 வரை நடைபெறும். பொது கலந்தாய்வு 08.06.2026 முதல் அந்தந்த கல்லூரிகளில் நடைபெறும். மாணாக்கர்களின் நலன் கருதி விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்களுக்காக இரண்டு நாட்கள் இடைவெளியில் www.tngasa.in இணைய தளம் வாயிலாக இன்று (01.06.2026) முதல் மீண்டும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சேர்க்கை உதவி மையங்கள்

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணாக்கர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறக் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 044 -24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இரண்டு மற்றும் மூன்றாமாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு வகுப்புகள் 15.06.2026 மற்றும் முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் 01..07.2026 அன்று தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com