தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடியில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 2 பேருக்கு இடையே 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துவந்தது.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரில் வசிப்பவர் விசுவாசம் மகன் பிரபு (வயது 35). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முருகன் மகன் ராமர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபு தனது இருசக்கர வாகனத்தை ராமர் வீட்டு அருகில் உள்ள தண்ணீர் பிடிக்கும் குழாய் அருகே நிறுத்தியுள்ளார். இதைப் பார்த்த ராமர், பிரபுவிடம் என் வீட்டு முன்பு எப்படி பைக்கை நிறுத்தலாம் என்று தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ராமரின் நண்பர்கள் 8 பேர் சேர்ந்து பிரபுவை சரமாரியாக தாக்கினார்களாம். இதில் அவரது 3 பற்கள் உடைந்தன. மேலும் தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் விசாரணை நடத்தி முத்தையாபுரம் சூசைநகரை சேர்ந்த முருகன் மகன் ராமச்சந்திரன்(27), அவரது தம்பி கார்த்திக்(19), சோலைராஜ் மகன் சுரேஷ்குமார்(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






