நேபாள வெள்ளத்தில் சிக்கிய 37 தமிழர்கள்; தமிழக அரசு அவசர உதவி எண் அறிவிப்பு

தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712 ஆகும்.

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 37 தமிழர்கள்; தமிழக அரசு அவசர உதவி எண் அறிவிப்பு
Published on

சென்னை

நேபாள வெள்ளத்தில் 37 தமிழர்கள் சிக்கிய நிலையில், தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதியில், லெண்டே கோலா ஆறும், பிற சிறிய ஆறுகளும் ஒன்றிணைந்து 'போடேகோஷி' ஆறாக கீழ்நோக்கி பாய்கின்றன.

திடீர் வெள்ளப்பெருக்கு

இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இதுவரை 95 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 93 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழர்கள் 37 பேர்

இந்த நிலையில், நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 750 பேர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும். 32 பேர் பாதுகாப்பு படையினரும் அடங்குவர்.

வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த 57 பேரும் உள்ளனர். இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 37 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.

தமிழக அரசு அவசர உதவி எண்

அவர்களை மீட்க தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712 ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com