

திண்டுக்கல்,
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிஎன்ஜி (CNG) எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நோக்கி சிஎன்ஜி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இன்று காலை லாரி திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த பள்ளப்பட்டி பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள், லாரியில் இருந்த சிஎன்ஜி சிலிண்டர்களில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சிலிண்டர்களை லாரியிலிருந்து மீட்கும் பணிகள் ஈடுப்பட்டனர்.
விபத்துக்குள்ளான லாரி மற்றும் சிலிண்டர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றதால், திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.