மாற்றுத்திறனாளி இளைஞர் மரணத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையாகும்.
டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை

ஒருபுறம் அடக்குமுறை, மறுபுறம் கரிசனம் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் போடும் இரட்டை வேடம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது நாகர்கோவில் அருகே குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை காவல்துறையினரே அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் .

மறுபுறம், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை சமூக வலைத்தளத்தில் விமர்சித்ததாக கூறி, கரூர் மாவட்டத்தைச் சார்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி இளைஞர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பணி நியமன ஆணை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை இப்படி மோசமாக இருக்க, இன்று காலை சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, அவரின் இருக்கைக்கே சென்று பணி நியமன ஆணை வழங்கிவிட்டு ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாவலராக தன்னைத் தானே முன்னிறுத்திக் கொள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரங்கேற்றியிருக்கும் நாடகம் மக்கள் மத்தியில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் மத்தியில் இனி எடுபடாது.

அடிப்படை உரிமை

எனவே, மாற்றுத்திறனாளி இளைஞர் மரணத்தில் முழுமையான விசாரணையை மேற்கொள்வதோடு, மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர் எனும் போர்வையில் அவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கும் சர்வாதிகாரப்போக்கை உடனடியாக கைவிட்டு, ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து விமர்சனங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்திட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com