

சென்னை,
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - பேட்மிண்டன் ஆண்கள் அணி பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், இந்த இரட்டையர் ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஹரிஹரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் வீரர் ஹரிஹரன் அவர்கள் மேன்மேலும் பல சாதனைகள் படைக்க அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
நம் வீரர் - வீராங்கனையர்கள் உலக அளவிலான போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று சாதனை புரிவது தமிழக இளைஞர்களுக்கு புதிய ஊக்கத்தையும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. விளையாட்டுத்துறையில் உங்கள் லட்சியங்களோடு நமது அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.