

ராமேசுவரம்,
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான நேற்று காலையில் அம்பாள் தங்கப்பல்லக்கிலும், இரவில் தங்க ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
7-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு அம்பாள் தங்கக்குதிரை வாகனத்தில் திட்டக்குடி மேலதெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் இன்று மாலை 5 மணி முதல் இரவு வரையிலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
ஆடி அமாவாசையான நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு ராமபிரான், தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது.
வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், நாளை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் இரவு 8 மணிக்குத்தான் சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழாவின் 9-ம் நாளான நாளை மறுநாள் காலை 9 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஆடி அமாவாசையன்று பக்தர்கள் கூட்டநெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யவும், தீர்த்தம் நீராடவும் கோவிலின் உள்பகுதி பிரகாரங்களில் பல்வேறு இடங்களில் தடுப்புக்கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க வசதியாக அக்னிதீர்த்த கடற்கரையில் தற்காலிக கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.