கவர்னருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு.. குதிரை பேரம் தொடர்பாக புகார் மனு அளிப்பு

சி.வி.சண்முகம் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தவிர மற்ற அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கவர்னருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு.. குதிரை பேரம் தொடர்பாக புகார் மனு அளிப்பு
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களை பெற்ற அ.தி.மு.க.வில், திடீரென பிளவு ஏற்பட்டது. அதாவது த.வெ.க. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 பேரும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

கொறடா உத்தரவை மீறிய 25 பேர் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் சேர்ந்தனர். சிலர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். சமரச பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தவிர மற்ற அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி., தனபால் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு களையப்பட்ட நிலையில் கவர்னருடன் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

கவர்னரிடம் அதிமுக நிர்வாகிகள் பேசியதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் குதிரை பேரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி கவர்னரிடம் அவர்கள் முறையிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

குதிரை பேரம் புகார் தொடர்பாக தவெக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். குதிரை பேரம் தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர், தலைமைச் செயலாளரிடம் கவர்னர் விளக்கம் கேட்க வேண்டும். அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலை பேசிய தவெக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான் கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை கோரிய மனு நிலுவையில் உள்ளது. நடவடிக்கை கோரிய மனு நிலுவையில் இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது தவறு. தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com