

சேலம்,
சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு விரைவில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தற்போது சென்னை, கொச்சி, பெங்களூரூ, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து இரவு நேர விமான சேவை மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என பல் வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், மேட்டூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயபாரதி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 4 கேள்விகளை கேட்டு சேலம் விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை மற்றும் மாலையில் விமானம் இயக்க வேண்டும். அதேபோல், சேலத்தில் இருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்துதல், விமான நிலைய முனைய விரிவாக்கம், பயணிகள் வசதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். இரவு நேர தரையிறக்க வசதிகளை செய்தல் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதற்கு விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் பதில் அளித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
அதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் விமானங்களை இயக்குமாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை கேட்டு கொண்டுள்ளோம். சேலம் விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்த பிறகு சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், இரவு நேரத்திலும் விமானம் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுக்கப்பட வில்லை. அந்த பணிகளும் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.