அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக: கவர்னர் ஆர்.என்.ரவி

அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக: கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை,

தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கவர்னரின் பிரதிநியை அமைப்பாளராகக் கொண்டு மேற்கண்ட 4 பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழ நியமனம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு கடந்த அக்டோபர் 25-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக தேடுதல் குழு தொடர்பான அரசாணையை தமிழக அரசு கடந்த 9-ம் தேதி வெளியிட்டது. அந்த அரசாணையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி, வேண்டுமென்றே யுஜிசி தலைவரின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார்.

யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழு பரிந்துரையின்படிதான் பல்கலைக்கழஙகளில் துணைவேந்தர் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேராசிரியர் பி.எஸ்.ஸ்ரீஜித்- டாக்டர் எம்எஸ்.ராஜஸ்ரீ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் யுஜிசி தலைவரின் பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கும் முற்றிலும் முரணானது.

எனவே, யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் நியமித்த தேடுதல் குழு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றம் தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவு அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com