

அமராவதி,
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துவாரபுடி கிராமத்தை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (41 வயது). உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் கோதாவரி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மண்டல வருவாய் அதிகாரி அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்த நிலையில் காதலித்துள்ளனர்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு சந்தியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் ஆத்திரமடைந்தனர்.
திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் தனது வீட்டுக்கு சென்றார். இதையறிந்த சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால், கிரிபாபு ஆகியோர் நள்ளிரவு சூரியபிரகாஷ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கினார்கள். பின்னர் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லை தூக்கி சூரியபிரகாசின் தலையில் போட்டனர். இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபால், கிரிபாபு ஆகியோரை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.