மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுத்தொகை முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் ஆகும்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகள் குறித்த போட்டியினை 2015-ம் ஆண்டு நிறுவி அதன் 11வது பதிப்பான 2025-ம் ஆண்டுக்கான குறும்பட போட்டிகளை நடத்துகிறது. இதற்கு நாட்டின் குடிமக்களாகிய எந்த வயதினரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதன் நோக்கம் மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், தங்களது படைப்பாற்றல் முயற்சிகளை அங்கிகாரம் செய்யவும் இப்போட்டிகளை நடத்துகிறது. இக்குறும்படம் எந்த தொழில்நுட்ப வடிவிலும் இருக்கலாம். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுத்தொகை முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் ஆகும். மேலும், ஆணைக்குழு விருதுகள் மற்றும் பாரட்டுச்சான்றுகளுக்கு கூடுதலாக "சிறப்பு குறிப்புச் சான்றிதழ்" (Certificate of Special Mention) வாய்ப்பும் உள்ளது. அதற்காக ரூ.50 ஆயிரம் வரை பரிசுத்தொகை வழங்கலாம். மேலும் அதிகபட்சம் ஜூரி (தீர்ப்பாயம்) பரிந்துரையின் பேரில் வழங்கலாம்.
மேலும் குறும்படங்கள் எந்த இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் துணை தலைப்புகளுடன் இருக்கலாம். குறும்பட கால அளவு குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிகபட்சம் 10 நிமிடங்களாக இருக்கலாம். பதிவுகளை அனுப்புவதற்கு கூகுள் டிரைவினை பயன்படுத்தி nhrcshortfilm@gmail.com என்ற இம்முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31.8.2025 ஆகும். இது இந்திய குடிமக்களை மையமாக கொண்ட மனித உரிமைகள், கலாச்சாரம் மற்றும் உணர்திறனை ஏற்படுத்தும் முயற்சிக்காக நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






