அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க இணைய தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. இந்தநிலையில் இந்த கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதள பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/ இணையதளத்தில் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அப்போது விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு, அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை இணைய வழியிலேயே மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை வீட்டில் இருந்தோ அல்லது அரசுக்கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்க உதவி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை விரும்பும் வரிசையில் பதிவு செய்ய வேண்டும். தரவரிசை பட்டியல் அந்த அந்த கல்லூரிகளில் இணைய தளங்களில் வெளியிடப்படும். பிளஸ் 2 வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.லிட் படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும். இதேபோன்று ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆங்கிலம் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும். மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் (400 மதிப்பெண்களில்) இது தயாரிக்கப்படும். இது, மற்ற அனைத்து பி.ஏ., பிஎஸ்.சி.,பி.காம்.,பிபிஏ,பிசிஏ, பிஎஸ்டபிள்யு உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்த பாடப்பிரிவுகளின் விருப்ப வரிசையின் அடிப்படையில் தரவரிசைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு ஆணைகளை அந்த அந்த கல்லூரிகள் வழங்கும். தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில் அந்த அந்த கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவு மற்றும் கல்லூரி வாரியாக எத்தனை பிரிவுகளை தேர்வு செய்யலாம் உள்ளிட்ட விவரங்கள் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேர்க்கை பெற https://tnpoly.in/ இணையதளத்தில் மே 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் இணைய தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், அந்ததந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியல் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளதால் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 570 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com