இந்து சமய அறநிலையத்துறையில் நியமன விதிகளை தளர்த்த கூடாது - காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்

அறநிலையத்துறையில் கோவில் உண்டியல் வருமானம் கோவில் நிலங்கள் கோவில் சொத்துக்களில் ஊழல் மலிந்துள்ளது என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
காடேஸ்வரா சுப்பிரமணியம்
Published on

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறையில் நியமன விதிகளை தளர்த்தக கூடாது. உரிய தகுதிகளின் அடிப்படையில் பதவி வழங்கினால் தான் கோவில்களை நிர்வகிக்க முடியும். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

முக்கியமான பணி

இந்து சமய அறநிலைய துறையின் கீழ் 48 ஆயிரம் கோவில்கள் உள்ளன. கோவில்களின் புனரமைப்பு, வரவு செலவு கணக்குகள் நிர்வகித்தல் உட்பட பல விஷயங்களை அறநிலையத்துறை கவனிக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் கோவில்களுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அதன் குத்தகை வருவாய் கணக்குகளையும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான பணி உள்ளது.

உதவி ஆணையர்

இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளுக்கு வருபவர்கள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் அந்த விதியை தளர்த்தி வருவாய்த்துறை உட்பட பலதுறைகளை சேர்ந்தவர்களை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலங்கள் கொள்ளை போகிறது

ஏற்கனவே தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் கொள்ளை போகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பழனி கோவில் நிலமோசடி, தாடிக்கொம்பு பெருமாள் கோவில் நிலமோசடி என கோவில் நிலங்கள் முறைகேடாக விற்கப்பட்டு வருகின்றன.

குத்தகை பாக்கி

கோவில் நிலங்களின் குத்தகை பாக்கி கோவில் இடங்களில் உள்ள கடைகளின் வாடகை பாக்கி கோடிக்கணக்கில் வசூல் ஆகாமல் இருக்கிறது. கோவில் நிலங்கள் குறித்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அறநிலையத்துறையில் பதவிக்கு வரும் உதவி ஆணையர் மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்புகளில் இருப்பவர்கள் சட்டப் படிப்பு படித்தவராக இருந்தால்தான் நிலைமையை எதிர்கொள்ள முடியும். அதனால்தான் உதவி ஆணையர் பதவிக்கு வருபவர்கள் தமிழக தேர்வாணையமான டி.என்.பி.சி தேர்வெழுதி சட்டப் படிப்பும் படித்திருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.

கடும் சவால்

தற்போது சட்டப்படிப்பு தகுதி தேவையில்லை எனும் போது கோவில்களை நிர்வாகிக்க கடும் சவாலை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். அரசு துறைகளில் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு இடமாற்றம் செய்வது என்பது வாடிக்கையான நிகழ்வு. ஆனால் அறநிலையத்துறையை பொருத்தவரை பிற துறைகளில் இருந்து இடமாற்றமாகி வருபவர்கள் தனித்துவமான கோவில் நிர்வாகிப்பணிகளை அனுபவம் வாய்ந்தராக செய்ய முடியாது.

கோவில் நிர்வாகம் சீர்குலையும்

உதவி ஆணையாளர் பதவிக்கு வருபவர்கள் இந்து மதம் பற்றியும் அதன் வரலாறுகள் பற்றியும் படித்திருப்பவராக இருந்தால் தான் கோவில்களை உணர்வோடு பராமரிக்க முடியும். யார் வேண்டுமானாலும் இந்த பதவிக்கு வர முடியும் என்ற சூழ்நிலை வரும் பொழுது கோவில் நிர்வாகம் சீர்குலையும்.

அபாய நிலை உருவாகலாம்

ஏற்கனவே அறநிலையத்துறையில் கோவில் உண்டியல் வருமானம் கோவில் நிலங்கள் கோவில் சொத்துக்களில் ஊழல் மலிந்துள்ளது. இதில் சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தும்போது இன்னும் பல விதமான ஊழல்கள் ஏற்பட்டு கோவில் சொத்துக்கள் கொள்ளை போகும் சூழ்நிலை ஏற்படும். இன்னும் பல கோவில் நிலங்கள் அபகரிக்கக்கூடிய அபாய நிலை உருவாகலாம்.

அதிகாரிகள் பற்றாக்குறை

ஆளும் த.வெ.க அரசு சட்டசபையில் கொண்டு வரவுள்ள அறநிலையத்துறை பதவி தகுதி குறித்த இந்த திருத்தத்தை மற்ற கட்சிகள் அனைத்தும் கோவில்கள் நலனை கொண்டு எதிர்க்க வேண்டும்.

அறநிலையத்துறையில் அதிகாரிகள் பற்றாக்குறையை நீக்க தற்போது உள்ள விதிமுறைகளின் படியே பணி நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலைத்துறையில் ஏற்கனவே உள்ள நியமன விதிகளை தளர்த்தக்கூடாது என இந்துமுன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com