குலசை கோவிலுக்கு சென்றபோது தகராறு: வாலிபர் அடித்து கொலை; தந்தை, 2 மகன்கள் கைது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகேயுள்ள கடற்கரை பூங்கா பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக குலசை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
வாலிபர் அடித்து கொலை, 3 பேர் கைது.
Published on: 

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்காவில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் அவரது 2 மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகேயுள்ள கடற்கரை பூங்கா பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக குலசை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

செல்போனை ஆய்வு செய்த போலீசார்

சம்பவ இடத்தில் இறந்து கிடந்தவர் உடன்குடி வில்லி குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் வேல்முருகன் (வயது 26) என்பது தெரியவந்தது. அவரது உடலுக்கு அருகில் கிடந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அது தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் காளிராஜ்(40) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

குலசை கோவிலுக்கு சென்றபோது தகராறு

உடனடியாக காளிராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. நேற்று இரவு காளிராஜ் மற்றும் அவரது மகன்களான முத்துவிஜய்(18), இசக்கிராஜா(18) ஆகிய 3 பேரும் குலசை கோவிலுக்குச் சென்றபோது, அங்கு வேல்முருகன் அவர்களுடன் தகராறு செய்துள்ளார்.

வாலிபர் அடித்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த தந்தை மற்றும் மகன்கள் 3 பேரும் சேர்ந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தந்தை மற்றும் மகன்கள் சம்பவ இடத்திலிருந்து தூத்துக்குடிக்கு தப்பி வந்த பின்னர்தான், தங்களது செல்போன் அங்கு மாயமாகி இருப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

தந்தை, 2 மகன்கள் கைது

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குலசேகரன்பட்டினம் போலீசார், காளிராஜ் மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குலசை தசரா திருவிழா மற்றும் விரத நிறைவுப் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com