போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

புதுக்கோட்டையில் இரவு ரோந்து பணியின்போது போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய மர்மநபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
Published on

இரவு ராந்து

புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வேலுச்சாமி. இவர் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டையில் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். காரை போலீஸ் டிரைவர் வினோத் ஓட்டினார். இந்த நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் புதுக்கோட்டை அருகே தட்டாம்பட்டியில் சந்தேகப்படும்படி நின்ற 4 பேரை பிடித்து இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி விசாரணை நடத்தினார்.

இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டனர்

அப்போது அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்தார். அவர்கள் கையில் இரும்பு பொருட்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 4 பேரையும் தரையில் அமர வைத்து இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி நின்றபடி விசாரித்து கொண்டு இருந்தார். மேலும் வாக்கி டாக்கியில் மற்றொரு இரவு ரோந்து வாகனத்தை வர சொல்லுமாறு டிரைவர் வினோத்திடம் கூறினார்.

அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி தாக்கி விட்டும், டிரைவரை வாக்கி டாக்கியில் பேசவிடாமல் தடுத்தும் தள்ளி விட்டுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுசென்றுவிட்டனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். அந்த இடத்தில் மர்மநபர்கள் விட்டுச்சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. டிரைவருக்கும் சிறிது காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடாபாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு ரோந்து பணியின் போது இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com