சட்டமன்ற தேர்தல்: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்கு செலுத்தக்கோரி 6,027 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தல்: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்
Published on

திருநெல்வேலி,

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சுகுமார் தலைமை வகித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்கு செலுத்தக்கோரி 6,027 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் வசிப்பிடத்திலேயே வாக்களிக்க ஏதுவாக 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வரும் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொகுதி வாரியாக சென்று தபால் வாக்குகளைச் சேகரிக்கும்.

நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக அனைத்து மையங்களிலும் சக்கர நாற்காலிகள் வசதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 758 வாக்குச்சாவடி அமைவிடங்களில் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உதவ 758 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற பயிற்சியில் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளைச் சேர்ந்த 268 தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:

மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமர்த்தி வாக்குச்சாவடிக்கு அழைத்து வருதல் மற்றும் மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தல். சக்கர நாற்காலிகளை முறையாகக் கையாளும் விதம் குறித்த செயல்முறை விளக்கம். வாக்குப்பதிவின் ரகசியத்தைக் காப்பதன் அவசியம்.

தன்னார்வலர்கள் அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடு. மற்ற தொகுதிகளுக்கான தன்னார்வலர்களுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தேர்தல்), மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com