பரிகார பூஜை செய்தவதாக பெண்களிடம் அத்துமீறிய ஜோதிடர்

பெண்ணை தொடர்பு கொண்டு பேசி வந்த ஜோதிடர் பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி மேட்டுப்பாளையத்தில்
பெண்களிடம் அத்துமீறிய ஜோதிடர்
Published on: 

சென்னை,

பரிகார பூஜை செய்தவதாக பெண்களை தனியாக அழைத்து ஜோதிடர் அத்துமீறியுள்ளார்.

பெண்களிடம் அத்துமீறல்

சென்னையை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் அறிமுகமானார். அவரிடம் தனது குடும்ப பிரச்சினைகளை கூறி அந்த பெண் தீர்வு கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜோதிடர். உங்களது தந்தையின் ஜாதகத்தில் தோஷம் உள்ளது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று பரிகார பூஜை செய்தார். தொடர்ந்து அந்த பெண்ணிடம் சமூக வலைத்தளம் மூலம் பேசி வந்த அந்த ஜோதிடர், உங்களது ஜாதகத்திலும் திருமண தோஷம் உள்ளது. அதற்கு தனியாக பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார்.

பின்னர், அந்த பெண்ணை தனியாக புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அத்துமீற முயன்றார். உடனே உஷாரான அந்த பெண் அவரிடம் இருந்து தப்பி சென்னைக்கு திரும்பினார். பின்னர் மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசி வந்த ஜோதிடர் பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்தார்.

அங்கு அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு சென்னை திரும்பிய அந்த பெண்ணின் செல்போன் அழைப்புகளை ஜோதிடர் தவிர்த்து வந்தார். பின்னர் அவர் குறித்து அந்த பெண் விசாரித்தபோது ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணை இதுபோன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சென்னை மேற்கு தாம்பரம் இணை ஆணையரிடம் புகார் அளித்தார். அத்துடன் அந்த ஜோதிடரால் பாதிக்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த பெண் கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார்களின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் அந்த ஜோதிடரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மேலும் பல பெண்களிடம் பரிகாரம் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் கிடைத்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

X