தர்மபுரி அருகே கொடூரம்: தனது தாயையும், மகளையும் ஒரே நேரத்தில் வெட்டிக்கொன்ற சமையல் மாஸ்டர்

இந்த இரட்டை கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி அருகே கொடூரம்: தனது தாயையும், மகளையும் ஒரே நேரத்தில் வெட்டிக்கொன்ற சமையல் மாஸ்டர்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி,

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபோதையில் தாய், மகளை வெட்டிக் கொன்ற சமையல் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

கருத்து வேறுபாடு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). ஓட்டல் சமையல் மாஸ்டர். இவருடைய மனைவி ஷாலினி. இவர்களது மகள் சின்மயி (19). இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதனால் சின்மயி, பாட்டி உமாராணி (60) உடன் வசித்து வந்தார். இன்னொரு வீட்டில் சுரேஷ் வசித்து வருகிறார். சேலத்தில் தனியார் ஓட்டலில் தங்கி கூலி வேலை செய்து வரும் ஷாலினி அவ்வப்போது ஊருக்கு வந்து மகள் சின்மயியை பார்த்து செல்வது வழக்கம். இதனிடையே நேற்று முன்தினம் இரவு சின்மயி சுரேசுக்கு சாப்பாடு கொடுக்க சென்றார்.

அரிவாள் வெட்டு

அப்போது சின்மயிடம், யாரிடம் நீ போன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன் நீ சரியாக இருந்திருந்தால் நான் தாயை பிரிந்து தனியாக இருப்பேனா?, நீ சரியில்லை எனக்கூறி தந்தையை சின்மயி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மது போதையில் வீட்டில் இருந்த அரிவாளால் மகளை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க வந்த உமாராணியையும் அவர் தாக்கி அரிவாளால் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உமாராணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சின்மயியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது.

இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்தனர்.

சிகிச்சை பலனின்றி மகளும் உயிரிழப்பு

இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்மயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், ஏ.பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com