மாநிலங்களவையில் ஓய்வு பெற்ற 6 தமிழக எம்.பி.க்களின் வருகைப் பதிவு விவரம்

கோப்புப்படம்
அன்புமணி ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
புதுடெல்லி,
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இதனால் நேற்று மாநிலங்களவை சுமுகமாக நடந்தது.
இதில் வைகோ உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்கள் குறித்து உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்களின் பங்களிப்பு தொடர்பாக பிற எம்.பி.க்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஓய்வுபெற்ற எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் தி.மு.க.வைச் சேர்ந்த கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் இன்று பதவியேற்க உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுடன் ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் வருகைப் பதிவு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி மொத்த அலுவல் நாட்களான 315 நாட்களில், பி. வில்சன் 300 நாட்களும் (95.24 சதவீதம்), சண்முகம் 280 நாட்களும் (88.89 சதவீதம்), சந்திரசேகரன் 217 நாட்களும் (68.89 சதவீதம்) வருகை தந்துள்ளனர்.
மேலும் வைகோ 178 நாட்களும் (56.51 சதவீதம்), அன்புமணி ராமதாஸ் 92 நாட்களும் (29.21 சதவீதம்) வருகை தந்துள்ளனர். முகமது அப்துல்லா 212 அலுவல் நாட்களில் 191 நாட்கள் (90.09 சதவீதம்) வருகை தந்துள்ளார்.






