

சென்னை,
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியபோது, பாடல் போட மறுத்த ஆட்டோ டிரைவரை தாக்கிய த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூத்தப்பேடு, குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு ராமாபுரம், ஏழுமலை தெரு வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது த.வெ.க. நிர்வாகி பிரீத்குமார் என்பவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் நடுரோட்டில் கொண்டாடியதாகவும், அனைவரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது மணிகண்டனின் ஆட்டோவை மறித்த பிரீத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், ஆட்டோவில் உள்ள ஸ்பீக்கர் மூலம் சினிமா பாடல்களை ஒலிக்கச் செய்யுமாறு கேட்டனர். அதற்கு மணிகண்டன் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த த.வெ.க. நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள், ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த மணிகண்டன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகி பிரீத்குமார் என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.