எங்களுக்குத் தகுதி பாடம் எடுக்க இவ்வளவு நீளமான கடிதம் தேவையா நயினார் அண்ணே? - மாணிக்கம் தாகூர் பதிலடி

2 நாட்களுக்கு முன்பு உங்க கட்சி எம்.பி என்ன பேசியிருக்காருன்னு கேட்டீங்களா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

காலங்காலமாக தமிழர்களுக்கு என்றும் விரோதமாக செயல்படும் உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு, பாஜகவை நோக்கி விரல் நீட்டி குறை கூற எந்த தகுதியுமில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-

நாடாளுமன்றப் பக்கமே வரவில்லை

அண்ணே நயினார் நாகேந்திரனுக்கு, நீங்க அனுப்பின கடிதத்துல CWRC, CWMA பத்தியெல்லாம் பாடம் எடுத்துட்டு, கடைசியில "பாஜகவை நோக்கி விரல் நீட்ட தகுதியில்லை"னு சொல்றீங்க.

நாங்க மட்டும் இல்ல அண்ணே... இந்த தேசத்தின் இளைஞர்களும் மாணவர்களும் நீட் ஊழல் முதல் வினாத்தாள் கசிவு வரை விரல் நீட்டிக் கேள்வி கேட்டதால தானே, அந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாம உங்க பிரதமர் மோடியும் உள்துறை மந்திரி அமித் ஷாவும் நாடாளுமன்றப் பக்கமே வராமல் ஓடி ஒளிஞ்சாங்க!

பாஜக எம்.பி பேசியதை கேட்டீங்களா?

காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை எப்போதும் தமிழக மக்களின் உரிமைக்காகவும், நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் சமரசமின்றி உறுதியாக நிற்பது தமிழ்நாடு காங்கிரஸ்! மாநிலத்தின் நலனைப் பாதிக்கும் எந்த செயலையும் நாங்கள் களத்தில் நின்று எதிர்த்தே வந்திருக்கிறோம்.

நீங்க சொல்றதெல்லாம் இருக்கட்டும்... கடந்த சில நாட்களாக கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டிருப்பது தெரிந்தும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அதாவது 2 நாட்களுக்கு முன்னாடி உங்க சொந்தக் கட்சி எம்.பி பசவராஜ் பொம்மை என்ன பேசியிருக்காருன்னு கேட்டீங்களா?

ஒரு சொட்டுத் தண்ணீரும் விடக்கூடாது

"கபினி, (KRS) அணைகளில் நீர்வரத்து குறைந்துவிட்டது. CWRC மற்றும் CWMA சொல்வதுபோல் 12,000 கன அடி தண்ணீர் திறக்க முடியாது. சிவக்குமார் உடனே உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்க வேண்டும். தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் விடக்கூடாது!" - என்று பகிரங்கமாக தூண்டிவிட்டு, தமிழக உரிமையைத் தடுப்பது உங்கள் பாஜக எம்பியும், முன்னால் முதல்-மந்திரியுமான பசவராஜ் பொம்மை தான்!

நாங்கள் ஆதாரத்தோடு விரல் நீட்டினால், மடைமாற்று அரசியல்னு பதுங்குறீங்க. கர்நாடகத்துல உங்க கட்சி எம்பி பண்ணுற அநியாயத்தை தட்டிக்கேட்க தயக்கம் காட்டிட்டு, எங்களுக்குத் தகுதி பாடம் எடுக்க இவ்வளவு நீளமான கடிதம் தேவையா அண்ணே?

வீடியோவை முழுசா போட்டுப் பாருங்க!

முதல்ல இந்த Back door அரசியல்ல இருந்து கொஞ்சம் வெளியே வாங்க அண்ணே... நீங்க மறைக்கப் பார்க்குற எல்லாமே இப்போ வெளிச்சத்துக்கு வந்துடுச்சு!

ப்ரீயா இருக்கும்போது கீழே உள்ள இந்த வீடியோவையும் கொஞ்சம் முழுசா போட்டுப் பாருங்க!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com