திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை அருகே கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு வாபஸ்

சிலை அமைப்பதை எதிர்த்த மனு வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை அருகே கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு வாபஸ்
Published on

சென்னை,

திருவண்ணமலையில் கிரிவலப்பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்து, ஜி.கார்த்திக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில், நீர் போக்குவரத்து நிலத்தை ஆக்கிரமித்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதாகவும், அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், வேங்கைக்கால் பகுதியில் ஜீவா கல்வி அறக்கட்டளை நிலம் வாங்கியுள்ளதாகவும், அந்த நிலத்துக்கு அருகே, நீர் போக்குவரத்து நிலத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளது என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கிற்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், ஜீவா கல்வி அறக்கட்டளை நிர்வாகி பதில் அளிக்க உத்தரவிட்டது. சர்ச்சைக்குரிய நிலத்தில் கருணாநிதி சிலையை அமைக்க இடைக்கால தடையும் விதித்தது.

அதைத்தொடர்ந்து, கலெக்டர், அறக்கட்டளை நிர்வாகி சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "சிலை அமைக்கப்பட உள்ள இடம் பட்டா நிலம், நீர் போக்குவரத்து நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தது யார் என்ற விவரங்களை மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடவில்லை" என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட நிலத்துக்கான பட்டா சட்டவிரோதமாக பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்படவில்லை, பட்டா நிலத்தில் சிலை அமைப்பதை ஆக்கிரமிப்பு என கூற முடியுமா? என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

பின்னர், பட்டாவை எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். இதன் காரணமாக திருவண்ணாமலையில் குறிப்பிட்ட அந்த நிலத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்பதற்கான தடை நீங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com