

தியாகதுருகம்,
ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் பெண் அரசு அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது போலீசார் இன்று (வியாழன்) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் குறித்து புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில் தன்னை சாதி பார்த்து பணிபுரிவதாக இழிவான முறையில் வசந்தம் கார்த்திகேயன் தொலைபேசியில் பேசியதாகவும், பணியில் நீடிப்பது குறித்து மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அநாகரிகமாக மெசேஜ் செய்தது மட்டுமின்றி அவதூறு பரப்பியதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் தியாகதுருகம் போலீசார் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம், பெண்ணை அவமதிக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ. மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.