கிழக்கு கடற்கரை சாலை: காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சொகுசு காரில் பெண்களை துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலை: காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
Published on

சென்னை,

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை தி.மு.க. கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசிச் சென்றதாகவும், அதற்கு நியாயம் கேட்க இளைஞர்கள் காரை நிறுத்தச் சொல்லியும் பெண்கள் சென்ற காரை நிறுத்தாமல் சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரைத் துரத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com