எந்த வங்கியின் காசோலை கொடுத்தாலும் அன்றே பணம்: புதிய நடைமுறை அமல்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி


எந்த வங்கியின் காசோலை கொடுத்தாலும் அன்றே பணம்: புதிய நடைமுறை அமல்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
x

எந்த வங்கி காசோலையாக இருந்தாலும் டெபாசிட் செய்த அதே நாளில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

சென்னை,

ஒரு வங்கியில், மற்ற வங்கியின் காசோலை வைப்பு செய்தால் அதிலிருந்து பணம் வருவதற்கு இதுவரை இரண்டு முதல் மூன்று வேலை நாட்கள் ஆகி வந்தது. இந்த நிலைமை நேற்று முதல் மாறிவிட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி, காசோலை வங்கியில் கொடுத்தவுடன் உடனடியாக ஸ்கேன் செய்து கிளியரிங் முகமைக்கு அனுப்பப்படும்.

அங்கிருந்து அது செலுத்தும் வங்கிக்கு சென்றடையும். அன்றைய மாலை 7 மணிக்குள் செக் ஏற்கப்படுமா? மறுக்கப்படுமா? என்பதனை சம்பந்தப்பட்ட வங்கி தெரிவிக்க வேண்டும். பதில் தரப்படவில்லை என்றால், அந்தக் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதனால் பணம் வாடிக்கையாளர் கணக்கில் சேர்ந்துவிடும். அதனால் இனி காசோலை வைப்பு செய்தவுடன் அது அதே நாளிலேயே கிளியரிங் செய்யப்பட்டு, அன்றே காசோலை கொடுத்தவரின் கணக்கில் பணம் சேரும். இந்த புதிய நடைமுறை நேற்று அமலுக்கு வந்துள்ளது.

மேலும் காசோலை விவகாரங்களில் மோசடிகளைத் தடுக்கும் வகையில் ‘பாசிட்டிவ் பே' முறைமையும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உள்ள காசோலைகளுக்கு இது பரிந்துரைக்கப்பட்டு, ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ள காசோலைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் காசோலை எண், தேதி, தொகை, பெறுனர் பெயர் போன்ற விவரங்களை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வங்கியில் பதிவு செய்யவேண்டும்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந் தேதி முதல், காசோலை கொடுத்தால், மூன்று மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட வங்கி அந்தப் பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் ஏற்றவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story