சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை

துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி உள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை
Published on

சென்னை,

பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கி உள்ளதாக கூறி, சேலம் பெரியார் துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக, பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை, சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்த நிலையில், அவரை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்த சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி, அவர்மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த தடையை நீக்க கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், தடை நீக்கப்பட்டதால் மீண்டும் புலன் விசாரணை துவங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ள காரணத்தினால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே துணைவேந்தர் மீதான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com