18 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு..!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் ‘Dream Olympics’ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

சென்னை,

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகை, தேசிய சப்-ஜூனியர் மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு அணியின் 12 வீராங்கனைகளுக்கு ரூ.18 லட்சம் ஊக்கத்தொகை, பாரா ஆசியப் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் சிறப்பு நிதி உதவி என மொத்தம் ரூ.8.57 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கிப் பாராட்டினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (8.10.2026) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ‘Dream Olympics’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று, பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 7 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்கள் வென்ற 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 51-வது தேசிய சப்-ஜூனியர் மகளிர் கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு அணியின் 12 வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக 18 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், ஜப்பானில் நடைபெறவுள்ள 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவுள்ள ஒரு வீரர் மற்றும் ஒரு வீராங்கனைக்கு 14 லட்சம் ரூபாய்க்கான சிறப்பு நிதி உதவிக்கான காசோலைகள் என மொத்தம் 32 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 8 கோடியே 57 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.

விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் வகையிலும், சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றிபெறும் வகையிலும், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் எனப் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்களின் மூலமாகவும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ளும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு நிதியுதவி 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொண்ட 37 வீரர், வீராங்கனைகளுக்கு 2 கோடியே 59 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 11 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 13 வீரர், வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 13 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டின் முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளதோடு, தடகளம் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 நொடிகளில் கடந்து, இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து வரலாறும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கோல் ஊன்றித் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பரணிகா இளங்கோவன், இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘Dream Olympics’ திட்டத்தைத் தொடங்கி வைத்தல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர், ஆசியப் போட்டிகள் / பாரா ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் / பாரா காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லும் அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு உயர்தரப் பயிற்சி பெறுவதற்காகவும், ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள ‘Dream Olympics’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் ஆண்டொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல்

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளில், தடகளம் மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், தடகளம் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், தடகளம் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும் வென்ற வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு 1 கோடியே 55 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • மகளிர் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனை கமலினிக்கு 75 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • ஆடவர் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு 75 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • தடகளம் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்ற வீரர் விஷாலுக்கு 80 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் அணியில் வெண்கலப் பதக்கமும் வென்ற வீரர் அபய் சிங்குக்கு 80 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்குவாஷ் மகளிர் அணிப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாக்கு 60 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்குவாஷ் ஆடவர் அணியில் வெண்கலப் பதக்கமும் வென்ற வீரர் வேலவன் செந்தில்குமாருக்கு 60 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • தடகளம் மகளிர் கோலூன்றித் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • தடகளம் கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கு 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • தடகளம் ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் ராஜேஷ் ரமேஷுக்கு 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • ஸ்குவாஷ் மகளிர் அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை ஷமீனா ரியாசுக்கு 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • பேட்மிண்டன் ஆடவர் அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் ஹரிஹரனுக்கு 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • படகோட்டப் போட்டி (Sailing) பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை நேத்ரா குமணனுக்கு 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோருக்குத் தலா 15 லட்சம் ரூபாய், வெண்கலப் பதக்கம் வென்ற வைஷாலி மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோருக்குத் தலா 10 லட்சம் ரூபாய், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இந்திய அணித் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 10 லட்சம் ரூபாய் என மொத்தம் 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 60 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;

  • 51-வது தேசிய சப்-ஜூனியர் மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு அணியின் 12 வீராங்கனைகளுக்குத் தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 18 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகை;

  • பாரா ஆசிய போட்டியில் பங்கேற்கவுள்ள வலுதூக்குதல் வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி மற்றும் தடகளம் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர் சோலைராஜ் தர்மராஜ் ஆகியோருக்குத் தலா 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 14 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி உதவி;

என மொத்தம் 32 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, 8 கோடியே 57 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை மற்றும் நிதி உதவிக்கான காசோலைகளை இன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ந. ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா. குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இணை முதன்மை செயல் அலுவலர் ஆ. மயில்வாகனன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com