

சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
அதன்பின்னர், 19 மற்றும் 22-ந் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது தினத்தந்தி பத்திரிகைக்கு அவர் நன்றி தெரிவித்து கூறியதாவது:-
கிளீன் கவர்னன்ஸ், குட் கவர்னன்ஸ் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இப்போது மட்டுமல்ல எப்போதும் இப்படித்தான் இருப்போம். இது 100 சதவீதம் உண்மை என்பதால்தான், பாரம்பரியமான 'தினத்தந்தி' பத்திரிகை "ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்படுகிறது" என்று 16-6-2026 அன்று ஒரு தலையங்கமே எழுதியிருக்கு. "ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று எம்.ஜி.ஆர். அன்று பாடினார்.
அதை இன்று விஜய் செயலில் காட்டுகிறார்" என்று அந்த எடிடோரியல்ல எழுதியிருக்கு. இந்த நேரத்தில் தினத்தந்திக்கு நம்முடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அரசியலுக்கு வந்து 2 வருடம்தான் ஆகிறது. உங்களுக்கு என்ன தெரியும், உங்களால் என்ன முடியும் என்று கேள்வி கேட்டவர்களுக்கு தினத்தந்தியில் வந்த பதிலே போதும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓவ்வொரு வீட்டிலும் இதயத்தில் இடம் பிடித்ததால் முதல்-அமைச்சர் ஆனேன். நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது” என்று முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.