

சென்னை,
திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 1-ந் தேதி நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொள்கிறார்.
திருச்சி புத்துார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டடத்தின் திறப்பு விழா மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத் தொடக்கி வைக்கவும் முதல்-அமைச்சர் விஜய் டிசம்பர் 1-ந் தேதி திருச்சி செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் சாலை வலம் மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் விஜய், கடந்த 20-ம் தேதி திருச்சிக்கு செல்லவிருவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை கடந்த ஒரு வாரமாக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். வியாழக்கிழமை பிற்பகல் வரையில் பரபரப்பாக இருந்த முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வுசெய்து வந்தனர்.
மேலும், திருச்சியில் முதல்-அமைச்சர் விஜய் சாலை வலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இதனிடையே, கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவையடுத்து, முதல்-அமைச்சரின் திருச்சி பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், திருச்சியில் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் கடந்த நவ. 23-ந் தேதி நடத்தப்படும் என்றும், முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அன்று த.வெ.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 1-ந் தேதி நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மாவட்டத்தில் டிச.1-ந் தேதியன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களைப் பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.