

சென்னை,
ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றுவார் என சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது, “தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்வர் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிகை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.
ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூகவலைதளங்களில் வெளியாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்” என பேசினார்.
தொடர்ந்து பதிலளித்த நிர்மல்குமார், 'ஜோசியம் என்று பேசுகிறார்கள்; ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது சரியான நேரத்தில் எடுப்போம்' என்று காரசாரமாகத் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது, ‘தமிழக சட்டசபையில் நடப்பது எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும். யார் எந்த தொகுதி சார்பாக கேட்கிறார்கள், அதற்கு பதில் சொல்வது தெரிய வேண்டும் என்பதற்காக தான் நேரலை தருகிறோம்.
நேரலை என்பது வெறும் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லாமல், முழுமையான நேரலை என்பது தவெக ஆட்சியில் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். கோப்புகளை திறப்பதில் முதல்-அமைச்சருக்கு தயக்கமில்லை. ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றுவார்’ என ராஜ்மோகன் கூறினார்.
சட்டசபையில் அவை குறிப்பிலிருந்து நீக்கியதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.