சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு சாகும் வரை சிறை!

அக்கம்பக்கத்தினர் 'சைல்டு லைனில்' தகவல் தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை
Published on: 

திருவண்ணாமலை,

மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து திருவண்ணாமலை 'போக்சோ' கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் பலாத்காரம்

திருவண்ணாமலை கோசாலை பகுதியை சேர்ந்தவர் பாஷா (வயது 53), தொழிலாளி. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த 2023-ம் ஆண்டு மூளை வளர்ச்சி குன்றிய 16 வயதுடைய சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச படங்களை காண்பித்து கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் 'சைல்டு லைனில்' தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் 'சைல்டு லைன்' அதிகாரிகள் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஷாவை கைது செய்தனர்.

சாகும் வரை சிறை

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள 'போக்சோ' வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார்.

இதில் மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி பாஷாவுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார். இதனை தொடர்ந்து பாஷாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com