சித்திரை திருவிழா: `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகம்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
சித்திரை திருவிழா: `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகம்
Published on

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் நடக்கிறது. இதனையொட்டி மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் அழகரை தரிசிப்பதற்காக மதுரை நோக்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக `வைகை வீரன்' புகார் செயலியை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். மக்கள் எந்த இடத்தில் இருந்தும் காவல் உதவியை நாடலாம் என்றும் புகார் கொடுக்க குறியீட்டை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து, செல்போன் எண் மற்றும் கியூஆர் ஸ்கேன் மேல் கொடுத்த எண்ணை தட்டச்சு செய்து அல்லது குரல் பதிவு, எழுத்து, குறுஞ் செய்தி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் காவல் கட்டுப்பாட்டு அறை, தொடர்புடைய காவல் ஆய்வாளர், உதவி ஆணையர், துணை ஆணையர் , காவல் ஆணையர் ஆகியோருக்குச் சென்றடைந்து நடவடிக்கை எடுக்கப்படும். திருவிழாவைக் காணவரும் மக்கள், இளைஞர்கள், பெண்கள், பக்தர்களுக்கு இடையூறு இன்றி விரும்பத்தகாத குறும்புச் செயல்களில் ஈடுபடாமல் அனைத்துத் தரப்பினரும் காவல்துறைக்கு ஒத்துழைக்கவேண்டும் என, மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com