

சென்னை,
சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்ல அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விழுப்புரத்தில் இருந்து வரும் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து வரும் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் மதியம் 12.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் மதியம் 1.45 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.
இதேபோல், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா மெமு ரெயில் அதிகாலை 4 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.
இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பலம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.