

சென்னை,
74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், 59 ஆண்டுகளாக கோலோற்றிய திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. என்ற இருபெரும் கட்சிகள், மாறி.. மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், கட்சி தொடங்கிய 2½ ஆண்டுகளில், தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது.
நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க., கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றது.
அதே நேரத்தில், இரு துருவங்களாக இருந்த தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் பகைமையை மறந்து கைகோர்த்து ஆட்சி அமைக்க முயன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இதை தி.மு.க. கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் உறுதிப்படுத்தினார்கள்.
இது எப்படி சாத்தியமாகும் என்று பொதுமக்கள் இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், 36 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் விமர்சகரும், 'துக்ளக்' ஆசிரியருமான சோ, இந்தக் கருத்தை கூறியிருக்கிறார்.
1990-ம் ஆண்டில் 'துக்ளக்' இதழில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு சோ இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.
அதாவது, வாசகர் ஒருவர், "தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேருவார்களா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த சோ, "நிச்சயமாக வரும் காலத்தில் 2 கட்சிகளும் ஜெயிக்க முடியாத சூழல் உருவாகும். அப்போது கூட்டணி அமைப்பார்கள்" என்று கூறியிருந்தார்.
தற்போது, தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும், அதுபோன்ற சூழ்நிலை உருவானதை பார்க்கும்போது, சோ ஒரு அரசியல் தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும்.