கோடை சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலரத் தொடங்கிய வண்ண வண்ண பூக்கள்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக தயார் செய்யப்பட்டுள்ள தொட்டிகளில் பல வண்ணங்களில் பூக்கள் மலரத் தொடங்கி உள்ளன.
கோடை சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலரத் தொடங்கிய வண்ண வண்ண பூக்கள்!
Published on

நீலகிரி,

சர்வதேச சுற்றுலாதலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. கோடை சீசனில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகின்றனர். தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வருகிற 23-ந்தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், மே மாதம் 2-வது வாரத்தில் மலர் கண்காட்சி நடைபெறும்.

இந்த நிலையில் மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது துரித கதியில் நடந்து வருகிறது. 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு உள்ள சில மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக, பேன்சி, சால்வியா, சைக்ளோமென் போன்ற மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மலர் கண்காட்சியின்போது, அவை அனைத்தும் மாடங்களில் காட்சிக்காக வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம்.

தற்போது தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம், கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் பல்வேறு வகையான பெரணி செடிகளையும், கள்ளிச் செடிகளையும் வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் பலரும் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com