

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, இன்று நாடாளுமன்ற ம்ழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி சிவா எம்.பி கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்து அரசு தெளிவான வழிமுறையை வெளியிட வேண்டும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தற்போது உள்ள தொகுதி எண்ணிக்கையின் படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை திமுக ஆதரிக்கிறது. தொகுதி மறுவரையறை குறித்து மேலும் தெளிவு வேண்டும். வரைவு மசோதாவை பார்த்த பின்னரே இறுதி நிலைப்பாடு” என்றார்.
தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய அரசு நிறைவேற்ற முயற்சித்தது. ஆனால் அப்போது மசோதாவை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா தோற்கடிக்கப்பட்டது தற்போது பல்வேறு மாநிலங்களிலும் அரசியல் சூழல் மாறியுள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் பலம் கூடியுள்ளது. இதுபோக சில கட்சிகள் ஆதரவு அளிக்கும் சூழலும் உருவாகியுள்ளதால் மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.