

சென்னை,
மாணவிகள் முதல் பெண்கள் வரை, தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கிறது என முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி தெங்கியாநத்தம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஓடும் பேருந்தில் அரசுப் பேருந்து நடத்துனர் மாணவிக்கு பாலியல் தொல்லை. சிவகங்கை மாவட்டம் சாக்கோடை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. சென்னை அரும்பாக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை திருப்பூர் வெள்ளக்கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வட மாநில இளைஞர். சென்னையில் ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிஎஸ்டி காவல் ஆய்வாளர். ராமநாதபுரம், கீழக்கரை இளைஞர் கஞ்சா இளைஞர்களால் பாலியல் வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம். திண்டுக்கல்லில் தனியார் பஸ் டிரைவர் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.
இவை வழக்குகளாகப் பதிவாகி செய்திகளில் வந்தவை மட்டுமே. இன்னும் எத்தனை பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ? ஏன். இந்தப் பதிவினை போஸ்ட் செய்யும் போது கூட தமிழகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் பெண் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். பெருமையாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கப் பெண்படையின் தற்போதைய நிலை என்ன? இத்தனை செய்திகளைப் பார்த்த பின்னும் சொல்வதற்கு ஒன்றுமில்லை..! தவெக அரசில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.