

கடந்த 2014-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பேய்குளம் பகுதியில் வைத்து மளவரயநத்தம் பகுதியைச் சேர்ந்த நங்கமுத்து (வயது 65), அவரது மகன் பொன்இசக்கி(43) ஆகிய 2 பேரையும் குடும்ப பிரச்சினை காரணமாக கால்வாய் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன்கள் முருகன்(45), சங்கரன்(எ) சங்கரபாண்டி(34) ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண்-II-ல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று மேற்சொன்ன நபர்களில் சங்கரன்(எ) சங்கரபாண்டி கடந்த 2019-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் மற்றொரு நபரான முருகன் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு கொலை குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், சாட்சிகளை மிரட்டிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதமும் மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சாத்தான்குளம் உட்கோட்ட டி.எஸ்.பி. ஆவுடையப்பன், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.